lundi 31 janvier 2011

சறுக்கிய சூர்யா, எட்டிப்பிடித்த விஜய் – 3 இடியட்ஸ்


3 இடியட்ஸ் படத்தை விட, அந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க ஹீரோக்களை ஒப்பந்தம் செய்தது சுவாரஸ்யமான கதை.
இந்தப் படத்தை தமிழில் எடுக்கும் உரிமையை ஜெமினி நிறுவனம் வாங்கியபோதே, அதன் ஹீரோ விஜய்தான் என்று முடிவு செய்திருந்தனர். 6 மாதங்களுக்கு முன்பே இதுகுறித்து விஜய் பேட்டியும் அளித்திருந்தார். விஷ்ணுவர்தன் இந்தப் படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது. சிம்புவும் நடிக்க சம்மதித்திருந்தார்.
ஆனால் இடையில் ஏகப்பட்ட மாறுதல்கள். எந்திரன் ரிலீஸானதும், ஷங்கரிடம் இந்த புராஜெக்டை கொண்டுபோனார்கள் ஜெமினி நிறுவனத்தினர் (எந்திரன் வெளியீட்டாளர்களும் ஜெமினிதான்!). அவரும் இயக்க ஒப்புக் கொண்டார்.
ஆனால் ஷங்கர் இயக்கும் இந்தப் படத்திலிருந்து விஜய் நீக்கப்பட வேண்டும் என ‘முக்கியமான இடத்திலிருந்து’ தயாரிப்பாளருக்கு பிரஷர் வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இதைப் பெரிதாக்காமல் அமுக்கிவிட்ட மீடியா, ஷங்கருக்கும் விஜய்க்கும் பிரச்சினை என்றும், விஜய் கெட்டப் மாற ஒப்புக் கொள்ளவில்லை என்றும் கிளப்பிவிட்டன. இத்தனைக்கும் வேலாயுதம் படம் ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கும் போதே, 3 இடியட்ஸுக்காக கெட்டப் மாற்றிக் கொண்டிருந்தார் விஜய் என்பதை ஒருவரும் சொல்லவில்லை!
ஒரு கெட்ட தினத்தில், விஜய் இந்தப் படத்திலிருந்து விலகிக் கொண்டார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ஜெமினி. ஆனால் ஷங்கர் வழக்கம்போல மவுனம் சாதித்தார்.
அதன் பிறகு இந்தப் படம் குறித்து யோசிக்கும் நிலையில் விஜய் இல்லை. காவலன் அவரை அந்தப் பாடு படுத்தியது. அதை வெளியிட்டு முடித்து, பாக்ஸ் ஆபீஸில் படம் சூப்பர் ஹிட் என ரிசல்ட் வரும் வரை விஜய்யால் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை.
இதற்கு நடுவில் 3 இடியட்ஸில் நடந்த சமாச்சாரங்கள் ஒரு மெகா சீரியலுக்கு சமமானது.
விஜய் நடிக்கவில்லை, அவருக்குப் பதில் சூர்யா நடிக்கிறார் என்று ஜெமினி நிறுவனம் அறிவித்ததிலிருந்துதான் பிரச்சினை ஆரம்பமானது. பெரும் வாய்ப்பு, பெரிய இயக்குநர், பெரிய நிறுவனம் எல்லாமே தன்னை மிக எளிதாகத் தேடி வந்ததால், சூர்யா தன் பங்குக்கு பெரிதாக பிகு பண்ண ஆரம்பித்தார் என்கிறார்கள்.
இயக்குநர் ஷங்கருக்கு எக்கச்சக்க கண்டிஷன்களைப் போட்டார். தெலுங்கிலும் நான்தான் ஹீரோவாக நடிப்பேன் என்பது அவரது முதல் கண்டிஷன். மகேஷ்பாபு அங்கே விலகிக் கொண்டதால், இருக்கட்டும் பரவாயில்லை என்று தயாரிப்பாளர் ஒப்புக் கொண்டார். ஷங்கர் மவுனம் காத்தார்.
அடுத்து, இந்தப் படத்துக்கு சம்பளமாக தமிழில் ரூ 12 கோடியும், தெலுங்கு விநியோக உரிமையில் 50 சதவீதமும் கேட்டாராம் சூர்யா (கிட்டத்தட்ட ரூ 10 கோடி இதன் மதிப்பு). அல்லது ஏதாவது ஒரு பதிப்பின் வெளியீட்டு உரிமையை தனது உறவினரின் நிறுவனத்துக்கு தரவேண்டும் என்றாராம். ஆடிப் போனார்கள் தயாரிப்பாளர்கள்!
அடுத்து அவர் வைத்த ஒரு மெகா கண்டிஷன்… மூன்று மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். அதாவது உதயநிதியின் ‘ஏழாம் அறிவு’, கேவி ஆனந்தின் ‘மாற்றான்’ படங்களை முடித்துவிட்டு வரும் வரை ஷங்கர் காத்திருக்க வேண்டுமாம்!
ஷூட்டிங்கும் முன்பே கண்ணைக் கட்டுதே என்று புலம்ப ஆரம்பித்தது தயாரிப்பாளர் தரப்பு.
ஆனால் ஷங்கர் மிகத் தெளிவாக இருந்தார். ‘மெயின் ஹீரோ யார் என்பதில் ஒரு முடிவுக்கு வாருங்கள், அதுவரை சும்மா இருக்க முடியாது’ என்று கூறிவிட்டு இரண்டாவது ஹீரோ ஜீவா, மூன்றாவது ஹீரோ ஸ்ரீகாந்த் மற்றும் சத்யராஜூடன் ஊட்டிக்குப் போய் ஷூட்டிங்கையே தொடங்கிவிட்டார் கடந்த ஜனவரி 25-ம் தேதி.
சூர்யா வேண்டாம் என்று முடிவு செய்த ஜெமினி, மீண்டும் விஜய்யுடம் பேச முடியுமா என இயக்குநர் ஷங்கரைக் கேட்க, அதற்காகவே காத்திருந்த மாதிரி சட்டென்று விஜய்யைத் தொடர்பு கொண்டாராம் ஷங்கர்.
காவலன் வெற்றி என்ற திருப்தியிலும், அடுத்த சில ஆண்டுகளுக்கு அரசியல் இல்லை என்பதில் தெளிவாகவும் இருந்த விஜய், எடுத்த எடுப்பிலேயே எந்த நிபந்தனையுமில்லாமல் சம்மதம் சொல்லியிருக்கிறார்.
வேலாயுதம் படத்தின் சில காட்சிகள் எடுத்து முடிந்ததும் படப்பிடிப்புக்கு ஆஜராகிவிடுவதாகக் கூறிவிட்டார். அதன்படி பிப்ரவரி 7-ந் தேதி முதல் விஜய் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். ஒருவழியாக 3 இடியட்ஸ் குழப்பத்துக்கு ஒரு நல்ல க்ளைமாக்ஸ் கிடைத்துவிட்டதாக கமெண்ட் அடிக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்!
படத்துக்கு இப்போதைய பெயர் மூவர். விரைவில் இந்தப் பெயர் மாறக்கூடும்

Aucun commentaire:

Enregistrer un commentaire

Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...