"என்னை சாக விடுங்கள்" சில தினங்களுக்கு முன் எஸ்.ஏ.சந்திரசேகர் மனக்குமுறலோடு அளித்திருந்த பேட்டியின் சாரம்சம்தான் இது! இவரே தயாரித்து இயக்கியிருக்கும் 'சட்டப்படி குற்றம்' படத்தின் ரிலீஸ் நேரத்தில் தரப்பட்ட இந்த பேட்டி, கோடம்பாக்கத்தில் ஒரு அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படம் வெளிவருவதை தடுக்க வேண்டும் என்று நோக்கத்தில் சிலர் செயல்படுவதாக அந்த பேட்டியில் கூறியிருந்தார் அவர். இதை படித்துவிட்டு பல்வேறு தரப்பிலிருந்தும் அவரது நண்பர்களும், நலம் விரும்பிகளும் எஸ்.ஏ.சிக்கு தொலைபேசி மூலம் ஆறுதலும், நம்பிக்கையும் அளித்துக் கொண்டிருந்தார்கள். அவ்வளவு பரபரப்புக்கு நடுவிலும் நமது கேள்விகளை எதிர்கொண்டார் எஸ்.ஏ.சி-
இவ்வளவு கோபமாகவும், வேதனையோடும் பேட்டியளிக்கிற அளவுக்கு என்ன நடந்தது? கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்களேன்.
நான் ஒரு படம் எடுத்திருக்கிறேன். அதை முறையாக சென்சார் அமைப்பினருக்குபோட்டுக் காட்டி, அனுமதியும் பெற்றிருக்கிறேன். ஒரு படத்தை முடக்கவும், தடுக்கவும் அந்த அமைப்புக்கு மட்டும்தான் அதிகாரம் இருக்கிறது. ஆனால் யார் யாரோ அந்த வேலையை செய்ய துடிக்கிறார்கள். அந்த வேதனையில்தான் அப்படி பேசினேன். இந்த நிமிஷம் வரைக்கும் என் படத்தை முடக்க சதி நடக்கிறது. அதை மீறி என் படத்தை வெளியே கொண்டு வர போராடிக் கொண்டிருக்கிறேன்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தை பார்த்த விநியோகஸ்தர்கள், படம் நன்றாக இருக்கிறது. நாங்கள் வாங்கிக் கொள்கிறோம் என்று நம்பிக்கையோடு செல்கிறார்கள். அடுத்த நாளே இந்த படத்தை எங்களால் வாங்க முடியாது என்று கையை விரிக்கிறார்கள். ஒரு சில விநியோகஸ்தர்கள் மட்டும் சொன்னால் பரவாயில்லை. அத்தனை பேரும் சொல்கிறார்கள் என்றால், அவர்களை வாங்க விடாமல் தடுப்பது யார்? ஏன் இப்படி செய்ய வேண்டும்? இதுதான் என் கேள்வி.
இப்படி செய்வது யார் என்று வெளிப்படையாகதான் சொல்லுங்களேன்?
அதை எப்படி நான் சொல்ல முடியும்? கண்ணுக்கு எதிரே வந்து மோதுவதை விட்டுவிட்டு கோழைத்தனமாக மோதுகிறார்கள். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். விஜய்யின் லட்சோப லட்சம் ரசிகர்களும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்ன செய்ய வேண்டும் என்று.
அதை எப்படி நான் சொல்ல முடியும்? கண்ணுக்கு எதிரே வந்து மோதுவதை விட்டுவிட்டு கோழைத்தனமாக மோதுகிறார்கள். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். விஜய்யின் லட்சோப லட்சம் ரசிகர்களும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்ன செய்ய வேண்டும் என்று.
ஒருவேளை நீங்கள் ஜெயலலிதாவை சந்தித்ததுதான் இதற்கெல்லாம் காரணம் என்று நினைக்கிறீர்களா?
அதுதான் எனக்கும் புரியவில்லை. சினிமா வேறு. அரசியல் வேறு. இரண்டும் ஒன்றையன்று சார்ந்திருந்தாலும் தன்னிச்சையாகதான் செயல்படுகிறது. எம்ஜிஆர் முதல்வராக இருக்கும் போதுதான் நீதிக்கு தண்டனை எடுத்தேன். அதை சினிமாவாகதான் அவர் பார்த்தார். இப்போது விஜய் பின்னால் திரண்டிருக்கிற ரசிகர்கள் அப்போது இல்லை. அப்படியிருந்தும் என்னால் நான் நினைத்த விஷயத்தை தைரியமாக திரையில் சொல்ல முடிந்தது. அதை அனுமதிக்கிற பெரிய மனம் எம்ஜிஆருக்கும் இருந்தது.
முன்பு விஜய் நடித்த காவலன் படத்தின் ரிலீஸ் நேரத்தில் பிரச்சனை வந்ததாக கூறினார்கள். இப்போது உங்கள் சட்டப்படி குற்றம் படத்திற்கும் பிரச்சனை என்கிறீர்கள். இப்படியெல்லாம் வரும் என்று முன்பே யூகித்தீர்களா?
நிச்சயமா இல்லை. நான் எதிர்பார்க்காத சோதனைகள்தான் இது.
தேர்தல் நேரத்தில் இந்த படம் வராமல் வேறு நேரத்தில் வந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்காதோ?
நான் அரசியல்வாதியும் அல்ல, தேர்தலுக்காகவும் இந்த படத்தை எடுக்கவில்லை. மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு வர வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட படம்தான் இது. அதுமட்டுமல்ல, நான் மார்ச் 25 ந் தேதி ரிலீஸ் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு எடுத்தேன். நான் துவங்கும்போது தேர்தல் கமிஷன் தேர்தல் நடக்கும் தேதியை அறிவிக்கவே இல்லையே. பிறகெப்படி அப்படி சொல்ல முடியும்?
ஸ்பெக்ட்ரம் விவகாரம், பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்ட சம்பவங்கள் போன்ற விஷயங்கள் படத்தில் சொல்லப்பட்டிருக்கிறதாமே?
சட்டப்படி குற்றம் ஒரு அரசியல் படமல்ல. சமுதாய குற்றங்களை இப்படத்தில் அலசியிருக்கிறேன். அவ்வளவுதான் சொல்ல முடியும் இப்போதைக்கு.
ரிலீசுக்கு பின்பும் படத்திற்கு இடர்பாடுகள் தொடரும் என்று நினைக்கிறீர்களா?
படம் வெளியான பின் மக்கள் சப்போர்ட் வந்துவிடும் என்று நம்புகிறேன். ஒவ்வொரு குடிமகனின் தனிப்பட்ட கோபத்தை திரட்டி சமூக கோபமாக்கியிருக்கிறேன். இந்த படம் சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது மட்டும் நிச்சயம்.
இந்த தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக விஜய் பிரச்சாரம் செய்வார் என்று சொல்லப்படுகிறதே?
அவர் என்னை மாதிரியல்ல. ரொம்ப பொறுமைசாலி. அதே நேரத்தில் அமைதி போராளி. எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டுமோ, அதை தைரியமாக சரியாக செய்வார். இந்த தேர்தலில் அவர் சுற்றுப்பயணம் செய்யப் போவதோ, பிரச்சாரம் செய்யப் போவதோ இல்லை.
அப்படியென்றால் வாய்ஸ்... அல்லது அறிக்கை?
இப்பவே கேட்டால் எப்படி? போக போக பாருங்கள்!
-ஆர்.எஸ்.அந்தணன்
Tags : Vijay, Sattapadi Kuttram
Aucun commentaire:
Enregistrer un commentaire