யாருடன் யார் கூட்டணி என்ற யானை, பூனை விளையாட்டெல்லாம் வெகு சகஜகமாக நடக்க ஆரம்பித்திருக்கிறது. கடந்த வாரம் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த விஜயகாந்த்தை நேருக்கு நேர் சந்தித்துவிட்டார் ரஜினி. இவர் உள்ளே வரவும் அவர் வெளியே செல்லவும் நேர்ந்த போது படிக்கட்டுகளில் நடந்த பத்து வினாடி சந்திப்பு அது! படக்கென்று விஜயகாந்துக்கு கைகொடுத்த ரஜினி, “கேள்விப்பட்டேன். வாழ்த்துக்கள்” என்று சொல்லிவிட்டு பளீரென்று உள்ளே சென்று விட்டார். யாருக்கும் புலப்படாத ஒரு கூட்டணி ரகசியம் ரஜினியின் காதுக்கு வந்திருப்பதாக எடுத்துக் கொள்ள வேண்டியதுதான் இதை!
இன்னொரு பக்கம் அரசியல் சதுரங்கத்தில் பல மாதங்களாகவே சோல்ஜர்களை வைத்துக் கொண்டு முழங்கிக் கொண்டிருந்த விஜய், யானை குதிரைகளையும் களமிரக்க ஆரம்பித்துவிட்டார். கடந்த சில தினங்களுக்கு முன் தன் ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகிகளை சென்னைக்கு வரவழைத்தவர் பல்வேறு திட்டங்களை முன் வைத்து விவாதித்தாராம்.
இன்னும் சில தினங்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கப் போகிறார் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி. இந்த சந்திப்பின் போது விஜய்யும் இருப்பார் என்கிறார்கள். என்றாலும் இது வெளிப்படையாக அறிவிக்கப்படாது என்றும், விஜய் துவங்கப் போகிற தனிக்கட்சிக்கு தன் ஆசிர்வாதங்களை வழங்கவிருக்கிறார் ஜெயலலிதா என்று பலமான பேச்சிருக்கிறது அரசியல் வட்டாரத்தில்!
யார் பக்கம் போவது, அல்லது தனிக்கட்சியாகவே தொடர்வதா என்றெல்லாம் குழம்பிக் கொண்டிருக்கும் நடிகர் சங்க தலைவரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் சமீபகாலமாக கொடுத்து வரும் பேட்டிகள் இதுவரை யூகிக்க முடியாத ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் என்றும் பேச்சிருக்கிறது.
Aucun commentaire:
Enregistrer un commentaire