mercredi 29 décembre 2010

கல்லா கட்டுமா காவலன்

நடிகர் விஜய்யை கலாய்த்து எஸ்.எம்.எஸ் ஜோக்குகளும் பதிவுலக காமெடிகளும் கலக்கிக்கொண்டிருக்கும் வேளையில் நக்கலை எல்லாம் ஓரம்கட்டிவிட்டி காவலன் படம் வெற்றி பெறுமா என்பது குறித்த ஒரு நடுநிலைப் பார்வை.

முதலில் எப்படியிருக்கிறது பாடல்கள்:
விஜய் படங்கள் எப்படி இருந்தாலும் பாடல்கள் நிச்சயம் வெற்றி பெற்றுவிடும். அதிலும் வித்யாசாகர். விஜய்யை பொறுத்தவரையில் ஏ.ஆர்.ரகுமான் இசைகூட சறுக்கிவிட்டது. ஆனால் வித்யாசாகர் இசை சறுக்கியதில்லை.

இந்தப் படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள்.
-          விண்ணைக் காப்பான் ஒருவன்... பாடலைக் கேட்டவுடனேயே இது ஒப்பனிங் சாங் என்று எளிதாக கூறிவிடலாம். வழக்கமான ஒன்றே தவிர புதுமைகள் ஒன்றுமில்லை.
-          ஐந்தில் என்னுடைய பேவரிட் சட சட... பாடல்தான். வித்தியாசமான டெக்னோ இசை. க்ளப் சாங் போல படமாக்கியிருப்பார்கள் என்று எண்ண வைக்கிறது.
-          ஸ்டெப் ஸ்டெப்... பாடலில் விதவிதமான ஸ்டெப்களை விஜய்யிடம் இருந்து எதிர்ப்பார்க்கலாம். அவரது நடனத்திறமைக்கு சவால்விடும் பாடல்.
-          யாரது... மற்றும் பட்டாம்பூச்சி... பாடல்கள் டூயட் வகையறா. ஏதோவொரு மலைமுகட்டில் நின்று பாடுவாடு போல என்மனவானில் காட்சி விரிகிறது.

காவலன் படத்தின் கதை:
இந்தப் படம் மலையாள ஹிட் படமான பாடிகார்ட் படத்தின் ரீமேக் என்பதை அறிந்து அந்தப் படத்தை தரவிறக்கி பார்த்தேன். சப் டைட்டில் இல்லாமலே புரிந்தது. அதன் கதை பின்வருமாறு.

ஒருவரியில் சொன்னால் ஒரு தாதாவின் அடியாளாக இருந்துக்கொண்டு அவரது மகளை காதலிக்கும் நாயகன் பற்றிய கதை.

கொஞ்சம் விரிவாகச் சொன்னால்,
ராஜ்கிரண் கட்டப்பஞ்சாயத்து வகையறா ரவுடி கம் தொழிலதிபர். ஆனால் நல்லவர் (!!!). அவரை ரோல்மாடலாக கருதி அடியாளாக இணைகிறார் ஹீரோ விஜய். ராஜ்கிரணின் மகளான அசினை பாதுகாக்கும் பொறுப்பு விஜய்யிடம் ஒப்படைக்கப்படுகிறது. அசினின் தோழியாக இரண்டாம் நாயகி மித்ரா. (தமிழில் சகோதரி என்று நினைக்கிறேன்). அசின்  விஜய் மறுபடியும் மோதலில் ஆரம்பித்து காதலில் முடியும் ஒரு காதல். ராஜ்கிரண் விஷயம் தெரிந்து சூடானாரா இல்லை காதலுக்கு கிரீன் சிக்னல் காட்டினாரா, விஜய்யும் அசினும் இணைந்தார்களா என்பதே மீதிக்கதை.

பழைய கள்ளுதான் என்பது தெளிவாக தெரிந்தாலும் மலையாளத்தில் இதை ஒரு மெல்லிய காதல் படமாக எடுத்திருக்கிறார்கள். தமிழில்...?

வித்தியாசமாக இருக்கும் என்று மலையாள ஒரிஜினலை பார்த்தவர்கள் சொல்லக்கூடும். ஆனால் விஜய் வழக்கமான அவரது பார்முலாப்படி திரைக்கதையில் நிறைய மாற்றங்களை புகுத்தியிருப்பார் என்றே எண்ணத் தோன்றுகிறது.

இந்த படத்தில் ஒரு புது விஜய்யை பார்க்கலாம் என்று சொல்கிறார்கள். விஜய்யை பொறுத்தவரையில் புதுமை என்றால் சிகையலங்காரத்தை மாற்றுவது மட்டும்தான். இந்தப் படத்திலும் அதைத்தான் செய்திருக்கிறார். (மேலே படம் பார்க்க). அதிகபட்சம், பாடல்காட்சிகளில் கலரிங் செய்துக்கொண்டு வருவார்.

படத்தில் காமெடியனாக வடிவேலு. விஜய்  வடிவேலு காம்பினேஷன் நிறைய படங்களில் ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது எனினும் வில்லு படத்தில் பயங்கர சொதப்பல். சுறா படத்திலும் சுமார் ரகமே. வசீகரா படத்தில் அமைந்தது போல காமெடி காட்சிகள் அமைந்தது என்றால் நிச்சயம் காமெடியில் காவலன் கலக்கும்.

விஜய்யின் அரசியல் நடவடிக்கைகள் படத்தை பாதிக்கும் ஒரு சூழல் உருவாகியிருக்கிறது. அதிலும் விஜய் அம்மா பக்கம் சாய்வது போல இருப்பதால் ஆளும் கட்சி படத்தை முடக்க முயற்சிக்கும். கலைஞர் தொலைக்காட்சியும், சன் தொலைக்காட்சியும் போட்டி போட்டுக்கொண்டு படத்தை இருட்டடிப்பு செய்வார்கள். அதற்கு பதிலாக ஜெயா டிவி காவலனை விளம்பரப்படுத்தலாம். ஆனால் இப்போ ஜெயா டிவிஎல்லாம் யார் பார்க்கிறார்கள்.

விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், அரசியல்வாதிகள், விஜய் எதிர்ப்பாளர்கள் இவ்வளவையும் மீறி காவலன் வெற்றிபெற வேண்டுமென்றால் அது முழுக்க முழுக்க உண்மையான விஜய் ரசிகர்களிடமே இருக்கிறது.

Aucun commentaire:

Enregistrer un commentaire

Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...