இலங்கை கடற்படையினரையும், தமிழக அரசையும் கண்டித்து கச்சத்தீவில் போராட்டம் நடத்த உள்ளதாக தேமுதிக ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் சிங்கை ஜின்னா தெரிவித்துள்ளார்.
விலைவாசி உயர்வை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட தே.மு.தி.க சார்பில் சாயல்குடியில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டம் முடிந்தவுடன், போலீசார் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக மாவட்டச் செயலாளர் சிங்கை ஜின்னா உட்பட 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த தே.மு.தி.க.வினர் போலீசாரை கண்டித்து போராட்டம் நடத்தினர். அப்போது ராமநாதபுரம் தேமுதிக மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா செய்தியாளர்களிடம் கூறியதாவது,
போலீசாரிடம் முறையான அனுமதி பெற்று தான் பொதுக் கூட்டம் நடத்தினோம். ஆனால், ஆளுங்கட்சியின் தூண்டுதலின் பேரில் எங்கள் மீது போலீசார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மீனவர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில், இது போன்ற பொய் வழக்குகளால் எங்களை முடங்க செய்யப் பார்க்கின்றனர். ஆனால் நாங்கள் இன்னும் அதிக அளவு தைரியத்துடன் போராட முடிவு செய்துள்ளோம்.
ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்களை திரட்டி கச்சத்தீவுக்கு 50 படகுகளில் சென்று, அங்கு இலங்கை கடற்படையினரையும், தமிழக அரசையும் கண்டித்து போராட்டம் நடத்த உள்ளோம். இதற்காக தலைவர் விஜயகாந்த் உத்தரவு கேட்டு கடிதம் அனுப்பியுள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் போராட்டம் நடைபெறும் என்றார்.
Tags : Vijay
Aucun commentaire:
Enregistrer un commentaire