சினிமா விழாக்களில் மைக் பிடித்தால் அன்று ஹாட்டான செய்தி உறுதி என்று உத்தரவாதம் தருகிற இரண்டு பேர் கோலிவுட்டில் உண்டு. ஒருவர் இயக்குனர் அமீர், மற்றொருவர் சென்னை மாவட்ட வினியோகஸ்தர் சங்கத் தலைவர் கலைப்புலி ஜி. சேகரன். இவர் பிரபல வார இதழ் ஒன்றுக்கு அளித்திருக்கும் அமளி துமளியான பேட்டியில், மாஸ் ஹீரோக்களில் யாருக்கு என்ன மார்க்கெட் வேல்யூ என்பது பற்றி காட்டமான ஒரு பட்டியலைப் போட்டு, தமிழின் பல முன்னணி ஹீரோக்களைக் கடுமையாக கலாய்த்திருக்கிறார்! அவரது வார்த்தைகளை அப்படியே இங்கே தருகிறோம்.
“இன்று விநியோகஸ்தர்களுக்கு ரஜினி படம் மட்டுமே லாபத்தைச் சம்பாதித்துக் கொடுக்கிறது. இவர் எந்தக் கதாநாயகனுடனும் ஒப்பிட முடியாத அளவிற்கு உச்சாணிக் கொம்பில் இருக்கிறார். இவருக்கு அடுத்த நிலையில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என இருந்தாலும், இவர்களில் நீ முந்தி நான் முந்தி என்ற நிலை இருக்கிறதே தவிர, எவரும் நிலையான இடத்தில் இருக்க மாட்டார்கள்.
தற்போது சூர்யாதான் எங்களின் வெற்றி நாயகன் இவரது கடைசி ஐந்து படங்கள் எங்களுக்குப் போட்ட முதலுக்கு மேல் நல்ல லாபத்தைச் சம்பாதித்துக் கொடுத்தது. காரணம் அவர் ஒவ்வொரு படத்திலும் தன்னை வித்தியாசப்படுத்தி, கதையம்சம் உள்ள படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்தது நடித்து வருவதால், இந்த வெற்றியைத் தக்க வைத்துள்ளார் சூர்யா.
தற்போது விஜய்க்கு டைம் சரி இல்லை அவரின் கடைசி ஐந்து படங்களும் எங்கள் கையைக் கடித்துவிட்டது. இவருக்கு நிறைய ரசிகர் கூட்டம் இருந்தாலும், ஒரே மாதிரியான வேடத்தில் நடித்துவருவதால் அவரோடு சேர்ந்து அவரது தலைவலியை நாங்களும் பங்கு போட்டுக்கொள்கிறோம். இதை இவர் திருத்திக்கொள்ளாமல் போனால் அவரின் சினிமா எதிர்காலம் பிரகாசமாக இருக்குமா என்பது சந்தேகமே…! விஜயை போலவே அஜித்தின் நிலையும் ஒண்ணும் சொல்லிக்கொள்வதுபோல் இல்லை.
விக்ரம் ரிஸ்க் எடுத்து நடிக்கிறார், கமர்ஷியல் ஹிட்டும் தருகிறார். நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பதால் தன்னை இன்னும் சினிமாவில் தக்க வைத்துள்ளார்.
இவர்களை அடுத்து சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி, கார்த்தி இருக்கிறார்கள். சமீபத்தில் சிம்புவின் விண்ணைத் தாண்டி வருவாயா மாபெரும் வெற்றிப் படமாகப் பிரச்சாரம் செய்யப்பட்டாலும் எங்களைப் பொருத்தவரை அது வெற்றிப் படமல்ல. தனுஷ், ஜெயம் ரவி நிலை ஒன்றும் சொல்வதற்கில்லை.
ஆனால் சூர்யா எப்படியோ அப்படியேதான் கார்த்தியும் எங்களுக்கு வெற்றி நாயகனாகத் திகழ்கிறார். அவரின் மூன்று படங்களுமே எங்களுக்கு நல்ல லாபத்தைக் கொடுத்திருக்கிறது.
மேற்சொன்ன அனைவருக்குமே ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது அவர்களை நம்பித்தான் நாங்கள் வாங்கி வெளியிடுகிறோம், அப்படி இருந்தும் பெரும்பாலான நடிகர்களின் படங்கள் எங்களை ஒரு வழியாக்கிவிடுகிறது. இவர்களில் யாராவது அடுத்தடுத்து வெற்றி தரும் பட்சத்தில் மற்றவர்களை பின்னுக்குத் தள்ளி முன்னுக்கு வந்துவிட முடியும். ஆனாலும் இவர்களின் இந்த நிலை நிலையானதாக இல்லை.
இவர்களில் யாரிடமும் போட்டி போடாமல் கமல் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி, அதிலேயே பயணித்துவந்தாலும் எங்களைப் பொருத்தவரை அவர் போணி ஆகாதவர். இருந்தாலும் எப்போதாவது அவர் எங்களுக்கு வெற்றி கொடுப்பது உண்டு.
இனி வரும் காலங்களில் எந்த நடிகருமே கதையம்சம் உள்ள படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்காமல் போனால் காணாமல் போவது உறுதி. தற்போது ரஜினிக்கு அடுத்து சூர்யா இருக்கிறார் மற்றவர்கள் எல்லாம் எங்கள் கணக்கிலேயே இல்லை.” என்று கலைஞானியையும் ஒரு பிடிபிடித்திருக்கிறார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire