தி.மு.க. கூட்டணி பற்றி விமர்சனம்: விஜய் தந்தை படத்தை தடை செய்ய வேண்டும்; தேர்தல் கமிஷனிடம் காங்.எம்.எல்.ஏ. புகார்
விஜய் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் “சட்டப்படி குற்றம்” என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் சத்யராஜ், சீமான், விக்ராந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமூகத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் காட்டில் பதுங்கி யுத்த பயிற்சி எடுத்து சத்யராஜ் தலைமையில் போராடுவதே கதை.
ஆறு பேர் பலியானால் நாங்கள் ஆயிரம் பேர் பலியாவோம் என்பது போன்ற பஞ்ச் வசனங்கள் இதில் உள்ளன. இந்த படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும் போது ஒருவர் 50 லட்சம் ரூபாய் செலவில் தேர்தலில் வென்று மந்திரியாகிறார்.பிறகு அவர் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார். இது சட்டப் படி குற்றம் இல்லையா? என்றார்.
இப்படம் தற்போதைய அரசியல் சூழலை சித்தரிப்பதாக உள்ளது என்கின்றனர்.
சத்யராஜ் சேகுவேரா செட்டப்பில் வருகிறார். வருகிற 25-ந் தேதி இப்படம் ரிலீசாகிறது. “சட்டப்படி குற்றம்” படத்தை எதிர்த்து செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ. தேர்தல் கமிஷனுக்கு புகார் மனு அனுப்பி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியுள்ள சட்டப்படி குற்றம் படத்தில் குறிப்பிட்ட அரசியல் கட்சி பற்றி விமர்சிக்கப்பட்டு உள்ளது. இது தேர்தல் விதி முறைக்கு முரணானது. இப் படத்தை தேர்தல் கமிஷன் பார்த்து அதன் பிறகு ரிலீசுக்கு அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார். இது குறித்து நிருபரிடம் அவர் கூறும்போது இந்த படத்தில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி பற்றி கடுமையாக விமர்சிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வந்தது. எனவே இதை தடை செய்ய வேண்டும் என்றார்.
Tags : Vijay, Sattapadi Kuttram


Aucun commentaire:
Enregistrer un commentaire