இளைய தளபதி என தனது ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் விஜய், தனது ரசிகர் மன்றங்களின் நிர்வாகிகளுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். விரைவில் அவர் அரசியல் பிரவேசம் செய்வார் என்றும் கூறப்படுகிறது. அரசியலுக்கு வருவேன் என்று வெளிப்படையாக ஏற்கனவே கூறியுள்ளார் விஜய். இருப்பினும் அதற்கேற்ற சமயம் வரும்போது முடிவெடுப்பேன் என்றும் ரசிகர்களிடம் கூறி வைத்துள்ளார். இடையில் அவரை காங்கிரஸுக்கு இழுக்க முயற்சிகள் நடந்தன. இருப்பினும் அது சரிப்பட்டு வரவில்லை.
இந்த நிலையில் நேற்று திடீரென தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்து அவசர ஆலோசனை நடத்தியுள்ளார் விஜய். ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து அரசியல் இயக்கமாக மாற்றுவது குறித்தும், வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களது நிலைப்பாடு குறித்தும், தலைமை அலுவலகம் அமைப்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
ஏற்கனவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் படப்பிடிப்புக்காக செல்லுமபோதெல்லாம் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து அரசியல் பிரவேசம் குறித்து ஆலோசனையும், கருத்தும் கேட்டு வந்தார் விஜய். மதுரை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகளின் கூட்டத்தில் விரைவில் அரசியல் பிரவேசம் இருக்கும் எனப் பேசினார். சில தினங்களுக்கு முன்பு உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற ரசிகர்மன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் அரசியல் குறித்துப் பேசினார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire