எனக்கு தலைவர்களைத்தான் தெரியும்… அவர்களின் கட்சிகளைத் தெரியாது, என்று விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். அடுத்து தான் இயக்கும் “சட்டப்படி குற்றம்” படத்துக்காக ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப்பகுதியில் படப்பிடிப்புக்கு ஏற்ற இடங்களைப் பார்வையிட வந்திருந்தார் எஸ்.ஏ.சி.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில் :
1982 ல் வெளியாகி வெற்றி பெற்ற “சட்டம் ஒரு இருட்டறை” படத்தை இந்த காலத்துக்கு ஏற்றாற்போல மாற்றி “சட்டப்படி குற்றம்” என்ற பெயரில் எடுத்து வருகிறேன். முதல் பாதி சென்னையிலும், பின் பாதி காடுகள் நிறைந்த பகுதிகளிலும் காட்சிகள் வருகின்றன. அதற்கான லொகேஷன் பார்க்கத்தான் வந்தேன். நான் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன். எனக்குள்ள சில பிரச்சினைகள் குறித்தும் மக்கள் தலைவர் என்ற முறையில் அவரிடம் சொன்னேன். இதில் மறைத்துப்பேச ஒன்றுமில்லை.
எனக்கு மக்களுக்கு நல்லது செய்யும் தலைவர்களை தெரியும். அவர்கள் இருக்கும் கட்சியை எனக்கு தெரியாது. காமராஜரைத் தெரியும், காங்கிரசை தெரியாது, எம்.ஜி.ஆரை தெரியும், அ.தி.மு.க.வை தெரியாது. கலைஞரை தெரியும், திமுகவைத் தெரியாது. விஜயகாந்தை தெரியும், தேமுதிக தெரியாது… அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாகத்தான் சந்தித்தேன்.
தற்போது விஜய் நேரடியாக அரசியலுக்கு வரமாட்டார். அரசியல் கட்சியும் உடனடியாகத் தொடங்க மாட்டார். அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும். அதற்கு அஸ்திவாரம் நன்றாக இருக்க வேண்டும். தற்போது அதற்கான அஸ்திவாரம் போட்டு வருகிறேன்… என்றார் எஸ்.ஏ.சி.
Aucun commentaire:
Enregistrer un commentaire