'நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார்...ஆனால் இப்போது வர மாட்டார். நான்தான் வரப் போகிறேன். பிரச்சாரத்திலும் இறங்குவேன், என இப்போது விஜய்யின் தந்தையும், திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறியுள்ளார்.
விஜய்யும் அவர் தந்தையும் அரசியலுக்கு வருவேன், வரமாட்டேன், ஜெயலலிதாவுடன் மரியாதை நிமித்த சந்திப்பு, கலைஞரை பிடிக்கும், திமுகவைப் பிடிக்காது என நாளும் ஒரு அறிக்கை வெளியிட்டும் பேட்டி கொடுத்தும் வருகிறார்கள்.
சமீபத்தில் நிருபர்களிடம் பேசிய விஜய் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன், "நான் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாகத்தான் சென்னையில் சந்தித்தேன். இதற்கு முன் ராகுல்காந்தியை கூடச் சந்தித்திருக்கிறேன்.
நான் அடிப்படையில் திமுக அனுதாபி. ஆனால் கருணாநிதியை அரசியல் தலைவராகச் சந்திப்பது கிடையாது. ஒரு கலைஞராகத்தான் சந்தித்திருக்கிறேன். எனக்கு அவரை அரசியல்வாதியாகத் தெரியாது.
இதுவரை 50 படங்களில் நடித்துள்ளார் விஜய். மேலும் 30 படங்களுக்கு மேல் நடிக்க வேண்டும் என்பது, எங்கள் இருவரின் ஆசை. இதற்கு அதிகம் உழைக்க வேண்டும்.
அவருக்கு இருக்கும் ரசிகர் பலத்துக்கு அவர் நிச்சயம் அரசியலுக்கு வரத்தான் போகிறார். ஆனால் இப்போது அல்ல. இப்போதைக்கு எந்தக் கட்சியிலும் சேர மாட்டார்.
சினிமா ஒரு நல்ல ஆயுதம். அதன் மூலமாக சமூகம், அரசியல் மாற்றங்களைக் கொண்டு வரலாம். நான் எப்போதும் மக்களுக்குச் சொல்ல வேண்டிய கருத்துக்களை, தைரியமாகச் சொல்வேன்.
நான் அரசியலில் நேரடியாக ஈடுபடவும் விரும்புகிறேன். இந்தத் தேர்தலில் நான் பிரச்சாரம் செய்யக் கூட தயாராக உள்ளேன். விஜய்க்கு ஒரு வலுவான அரசியல் அடித்தளம் அமைப்பதுதான் என் வேலை. அப்படி அமைந்தபிறகு அவர் அரசியலுக்கு வருவார்," என்றார்.
இறுதிவரை இருவரும் என்னதான் சொல்ல வருகிறார்கள் என்பது சத்தியமாக யாருக்குமே புரியவில்லை.
Aucun commentaire:
Enregistrer un commentaire