பொங்கல் முடிந்த கையோடு ரசிகர் மன்ற மாநாட்டைக் கூட்டும் விஜய், அந்த மாநாட்டிலேயே புதிய கட்சியை அறிவிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அவருக்கு முக்கிய கட்சிகள் உறுதுணையாக இருக்கும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. நடிகர் விஜய் அரசியல் பிரவேச ஏற்பாடுகள் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன.
2011 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே அவர் தனது புது கட்சியை அறிவிக்கிறார். விஜய் ரசிகர் மன்றம் ஏற்கனவே மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டு உள்ளது. உறுப்பினர் சேர்க்கையும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கிராமப்புறம் வரை மக்கள் இயக்க கிளைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஏழைகளுக்கு பசுமாடுகள், இலவச அரிசி, வேட்டி சேலை என விஜய்யே நேரடியாக இறங்கி உதவிகள் வழங்கி ஆதரவு திரட்டி வருகிறார்.
மாவட்டங்கள்தோறும் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக ரசிகர் மன்ற நிர்வாகிகளை இரு வாரத்துக்கு முன்பு நேரில் அழைத்துப் பேசினார். ரசிகர்கள் ஒட்டு மொத்தமாக அரசியலில் ஈடுபடலாம் என கருத்து தெரிவித்துள்ளனர். இதையடுத்து அரசியல் கட்சிக்கான வேலைகள் தீவிரமாக துவங்கியுள்ளன. மாநாடு நடத்தி புது கட்சியை அறிவிக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.
பொங்கலையொட்டி ஜனவரி 17-ம் தேதி இந்த மாநாடு நடத்தப்படும் என தெரிகிறது. அன்றுதான் அமரர் எம்ஜிஆர் பிறந்த நாள். பல்வேறு மாவட்டங்கள் மாநாட்டுக்காக பரிலீசிலிக்கப்பட்டன. இறுதியாக திருச்சியில் நடத்த முடிவாகியுள்ளது. மாநாட்டுக்கு அனைத்து ஊர்களில் இருந்தும் லட்சக்கணக்கானோரை வரவழைக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. கட்சி பெயர், கொடி போன்றவை குறித்து முக்கியஸ்தர்களுடன் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார்.
திராவிட என்ற வார்த்தை இடம் பெறும் வகையில் கட்சி பெயரை உருவாக்குகின்றனர். கொடியும் இரு வண்ணங்களில் இருக்கும் என்று கூறப்படுகிறது. மாநாட்டிலேயே கட்சிக்கு தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளும் அறிவிக்கப்பட உள்ளனர். சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதா? அல்லது பிற கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதா? என்பது பற்றியும் மாநாட்டில் முடிவெடுத்து அறிவிக்கப்படுகிறது.
விஜய் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். வரும் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப் போவதாகவும் அறிவித்துள்ளார். இந்த பிரச்சாரத்தில் விஜய்யும் இருப்பாரா என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.
தேர்தலில் விஜய் போட்டியிட வேண்டும் என்று ரசிகர்கள் வற்புறுத்தியுள்ளனர். திருச்சி, கோவை ஆகிய இரு தொகுதிகளிலும் விஜய்க்கு அதிக செல்வாக்கு இருப்பதாக கணித்துள்ளனர். புதுக்கோட்டையில் எஸ் ஏ சந்திரசேகரன் போட்டியிடுவதாகத் தெறிகிறது.
Aucun commentaire:
Enregistrer un commentaire