vendredi 7 janvier 2011

காவலனை திரையிட மறுப்பதா? -கண்டிக்கும் விநியோகஸ்தர்கள்!

விஜய் நடித்த “காவலன்” படம் பொங்கலுக்கு வருகிறது. “சுறா” படத்துக்கு நஷ்டஈடு அளிக்காததால் இப்படத்துக்கு ஒப்புதல் அளிக்கமாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விநியோகஸ்தர் சங்கத்தலைவர் கலைப்புலி ஜி.சேகரன், செயலாளர் மதுரை செல்வின் ராஜா ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில் கூறி இருப்பதாவது :
தமிழ் திரைப்பட தொழிலில் பிரச்சினைகளை தோற்றுவிக்கும் விதமாக திருச்சியில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கொடுத்த அறிக்கையை தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. தொழில் என்றால் நஷ்டமும் உண்டு. லாபமும் உண்டு. யாரையும் கட்டாயப்படுத்தி பொருளை விற்க முடியாது. அப்படி விற்றால் அது வியாபாரமாகாது. இஷ்டப்பட்டு தான் வியாபாரங்கள் நடக்கின்றன. லாபம் எனக்கு… நஷ்டம் உனக்கு… என்று கோரிக்கை வைப்பது தொழில் அடிப்படையை தகர்க்கும் செயல்.
தயாரிப்பாளர்கள் படத்தை எம்.ஜி. முறையிலோ அவுட் ரேட் முறையிலோ வாங்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தி விற்க முடியாது. விநியோகஸ்தர்களும் அதே முறையில் வாங்கும்படி தியேட்டர் உரிமையாளர்களை மிரட்டுவது இல்லை. நஷ்டம் ஏற்பட்டதாக தியேட்டர் உரிமையாளர்கள் பணத்தை திருப்பி கேட்பது போல் ரசிகர்களும் படம் பிடிக்கவில்லை என பணத்தை திருப்பிக்கேட்டால் நீங்கள் கொடுப்பீர்களா?
“காவலன்” திரைப்படம் வாயிலாக எங்கள் விநியோகஸ்தர் ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கு எதிரான முரண்பாடான அறிக்கை கொடுப்பதை இனியும் நாங்கள் பொறுக்க முடியாது. ‘திரைப்பட புகை வண்டி’ தடம் புரளாமல் ஓட துணை புரிய வேண்டுமேயின்றி தடம் புரள காரணமாக இருக்கக்கூடாது என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire

Powered By Blogger
Related Posts Plugin for WordPress, Blogger...